Tuesday, August 24, 2010

அகதிகள்!

மள மள வென எழுந்து,
பள பள வென பல் தேய்த்து,
சல சல வென நீரில் குளித்து,
தொள தொள வென உடையணிந்து,
சுட சுட சாப்பிட்டு,

பர பர வென பள்ளி சென்று,
மட மட வென படித்து,
கட கட வென ஒப்பித்து,
விறு விறு வென வீடு திரும்பி,

துறு துறு வென விளையாடி,
கல கல வென சிரித்து,
வழ வழ வெனப் பேசி,
தழ தழ வென்றிருந்த எம்
வாழ்வில் ஒரு நாள்...

திடு திடு வென இராணுவம் நுழைந்து,
சிடு சிடு வென கோபத்துடன்,
பட பட வென குண்டு வெடித்து,
கிடு கிடு வென எல்லாம் சரிந்ததை நினைக்கையில்,
பொள பொள வென கண்ணீரில்
எம் கண்கள்...

இரு வார்த்தைகள் பிரிவதால்
பொருளற்றுப் போகும்
தமிழ் வழக்கைப்போல்,
சொந்த நாட்டைப் பிரிந்த எம் வாழ்வும்
அர்த்தமற்று அகதிகளாய்....

Friday, August 20, 2010

அவதாரம்!

இயன்றும் இயலாமை
இயலாமை இல்லாமை

அரியணை வென்றும்
ஆரவாரம் இல்லை
ஏழ்மையிலும் ஏற்பார் இல்லை

தொடர்பற்ற வார்த்தைகள்
தொடர்ந்து வந்த உறவுகள்
துறந்துவிட்ட நினைவுகளில் நான்,

மழைச் சாரலில்
சூரியனின் அஸ்தமனத்தில்
நதியின் ஜதியில்
வானவில்லின் உடையில்
நிலவின் மடியில்
நட்சத்திரங்களின் ஒளியில்
மலையளவு எண்ணங்களில்
வானளவு உயரத்தில்
ஆழ்கடலின் அமைதியில் நான்,

நானாக இல்லை நான்
வேறாக வில்லை, இதை
அறியாமல் இல்லை

முற்பாதி கனவிலும்,
பிற்பாதி கற்பனையிலும் தோன்றிய
சில காட்சிகள் என.

கனவிலும், கற்பனையிலும்
ஆன்மா ஒன்றாகினும்
ஆத்மா பலவாயின.