மள மள வென எழுந்து,
பள பள வென பல் தேய்த்து,
சல சல வென நீரில் குளித்து,
தொள தொள வென உடையணிந்து,
சுட சுட சாப்பிட்டு,
பர பர வென பள்ளி சென்று,
மட மட வென படித்து,
கட கட வென ஒப்பித்து,
விறு விறு வென வீடு திரும்பி,
துறு துறு வென விளையாடி,
கல கல வென சிரித்து,
வழ வழ வெனப் பேசி,
தழ தழ வென்றிருந்த எம்
வாழ்வில் ஒரு நாள்...
திடு திடு வென இராணுவம் நுழைந்து,
சிடு சிடு வென கோபத்துடன்,
பட பட வென குண்டு வெடித்து,
கிடு கிடு வென எல்லாம் சரிந்ததை நினைக்கையில்,
பொள பொள வென கண்ணீரில்
எம் கண்கள்...
இரு வார்த்தைகள் பிரிவதால்
பொருளற்றுப் போகும்
தமிழ் வழக்கைப்போல்,
சொந்த நாட்டைப் பிரிந்த எம் வாழ்வும்
அர்த்தமற்று அகதிகளாய்....
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் கவிதை "அருமை!"
ReplyDeleteஆனால் அப்படியெல்லாம் நான் கூற மாட்டேன். அகதிகள் என்ற தலைப்பைப் பார்த்ததுமே 'நீங்களும் பிற கவிஞர்களைப் போல் துன்ப மயமாகவே கூறியிருப்பீர்' என்று ஒரு கணம் எண்ணிப் பின்னர்தான் படிக்கத் தொடங்கினேன். ஆனால் ஒரு குழந்தை தனது அன்றாடச் செயல்களைப் பற்றி விவரித்து பின்னர் தான் ஓர் அகதியாய்ப் பிறந்ததால் அந்த அன்றாட செயல்பாடுகளில் ஏற்பட்ட ஒரு பாதிப்பாகத்தான் இராணுவத்தின் வெறிச்செயலைக் கூட எண்ணுகிறது என்பதை நீங்கள் கூறும்போது கண்களில் என்னையறியாமல் நீர் கசிந்தது.
//மட மட வென படித்து,
கட கட வென ஒப்பித்து,// எல்லா நாட்டுக் குழந்தைகளும் இப்படித்தானா?
//இரு வார்த்தைகள் பிரிவதால்
பொருளற்றுப் போகும்
தமிழ் வழக்கைப்போல்,// அருமையான உவமை.
ஒரு சிறு குறை மட்டும்.
//தல தல வென்றிருந்த எம்// "தழ தழ வென்றிருந்த எம்" இனிமேல் திருத்திக் கொள்ளுங்கள். விருப்பப்படின் இதையும்...
கவிதை, மிக மிக அழகாக உள்ளது.
ReplyDelete